மலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்

ஓவியம் : John Fernandas 

தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும்.

கவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, "மின் வெட்டு நாளில்" என்கிற பாடலில் "பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், "தோள் சேர்த்தல்" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது.

அதேபோல, "தீ இல்லை புகை இல்லை" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும்  தமிழ் அழகு செழித்திருக்கும். "முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது. 

உறவு கொள்கையில் நகக்குறி  இடுதல், பற்கள் பதித்தல் எல்லாம் காதலின் பெறுமதிமிக்க   சின்னங்கள் என்பது   வாத்ஸ்ஸாயனர் கூற்று. ஒருவரின் இன்மையின்போது அவற்றைப் பார்த்து இரசிப்பது காதலர்களுக்கு ஆறுதல் என்று சொல்கிறார். வாத்ஸாயனர் கூற்றுப்படி,  நகக்குறி இடுதலில் எட்டு வகைகள் இருக்கிறது. பற்கள் பதிப்பதில் பத்து வகைகள் இருக்கிறது. எங்கெங்கு பதிக்கவேண்டும், எங்கெங்கு கூடாது  என்றும் இருக்கிறது. இது பயிற்சியால் செய்யவேண்டிய கலை. காயங்கள் ஏற்படுத்தாமல் தடயங்கள் மட்டும் விட்டுச் செல்லல் பயிற்ச்சியால் மட்டுமே விளையக்கூடியது. ஆழ்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்த இடப்படும் அடையாளங்கள். காதலின் உச்சத்துக்கு துணையால் சூட்டப்பட்ட மரியாதைச் சின்னம் என்று காதலர்கள் மகிழ்ந்து கொள்வார்கள். அதைப் பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனத் தோன்றும்.

நம்முடைய கலிங்கத்துப் பரணியில் ஒரு பாடல் வருகிறது. பதிக்கப்பட்ட  அடையாளங்களை யாரும் இல்லாத நேரம் பார்த்து  பெண்கள் கண்டுகளித்து பெருமை கொள்வர் என்று சொல்கிறது பாடல்.

ஆனால் வாத்ஸாயனர் காமசூத்திரம் எழுதும்போது பெண்களின் இச்சைகளுக்கும் முன்னிலை கொடுத்தவர் என்பதால் பெண்கள் இடும் நகக்குறிகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நம்முடைய படைப்புகளில் பெண்களின் இச்சைகளுக்கு அதிக  முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது. சினிமாப் பாடல் வரிகளில் வைரமுத்து வரிகள் இதை உடைத்தது.

'நகக்குறி இடுதல்' என்பதிலேயே ஒருவித உடன்பாடு இருக்கிறது. இந்தச் சின்னம் வைத்தல் என்கிற சொல்லும் அத்தனை நயமானது. 

படிப்பவர்கள், "வாங்கிக்கொண்டேன் உன்னை. ஆடை கொண்டதோ தென்னை" என்கிற வரிகளில் இருக்கும் அழகைக் கண்டறிய முனையலாம். வாலி குறும்புக்காரர். 

பகுதி 1

பகுதி 2

Comments

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்