உயிரே! காதலின் உச்சம்

ஒருகாலத்தில் மணிரத்னம் இயக்கிய  திரைப்படங்களில் இணைந்து இயங்கிய  கூட்டணிபோலப்  பொருத்தமான கூட்டணிகள் எல்லோருக்கும் அமையவில்லை. தன்னைச்சுற்றி ஒரு நல்ல குழுவினை அமைத்துக்கொண்டார் எனலாம். ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவர் பேணுகிற அமைதி, அது தருகிற  ஆழம், இடைவெளிகள் , கவித்துவம் என்பன அவரின் தனித்துவம். அதனாலேயே  அவற்றை மீண்டும் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத்  தவிர்க்கமுடிவதில்லை.  அப்படியான, குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான உயிரே திரைப்படத்தைப்  பற்றிச்  சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும்.

                              


ஒரு போராட்டக் குழுவினைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஏற்படுகிற காதல்,காமம்,ஏக்கம்,போராட்டம் போன்றவற்றுக்கான பதிலை அவற்றினூடே காட்ட முயற்சித்த படம்.  அதில் மனிஷாவின்(மேக்னா ) பாத்திரம்தான் கவனிக்கப்படவேண்டியது. அதனால், தன்னுடைய சிறிய வயதிலேயே வன்புணர்வுக்கு உள்ளாகிய, Posttraumatic stress disorder இருக்கிற ஒரு பெண்ணுக்கும்   ஆணுக்கும் இடையிலான காதல்க்கதை  என்றால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். உளவியல் பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண், காதலினால் எப்படித் தன்னை மீளவும் அமைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள் என்பதைக் காட்சியமைப்புகளினூடு சொல்லியிருப்பார். அதாவது ஒரு பெண்ணைப் பாதிப்பிலிருந்து படிப்படியாக மீட்பதுதான் திரைப்படம் முழுதும் காதலாக வியாபித்திருக்கிறது.

ஒரு Rape trauma syndrome உள்ள பெண்ணாக மனிஷாவின் நடிப்பைச் சொல்லியாகவேண்டும். காதல், காமத்தின் மீது விருப்பமிருந்தாலும் தன்னுடைய பழைய பாதிப்புகளிலிருந்து மீளமுடியாத பெண்ணை அவரின் நடிப்பில் பார்க்கலாம். வன்புணர்வினால் பாதிக்கப்பட்டோருக்கு  hapnophobia இருக்கும். அதாவது தொடுதலும் தீண்டப்படுதலும் பிடிக்காது.  Anxiety attacks அதிகம் ஏற்படும். மூச்சுவிடுதலில் சிரமமிருக்கும்.  அமர் மேக்னாவைத் தொட முற்படும்போதெல்லாம் மேக்னா ஒருவித எதிர்ப்பைக் காட்டுவார். அந்த எதிர்ப்பே அன்புக்கும் உளவியல் பாதிப்புக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும். இதையெல்லாம் மணிரத்னம் திரைப்படத்தில் கவனமாகக் கையாண்டிருப்பார். கூடுதலாக மக்கள் நடமாட்டம் அற்ற வெளிகளை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் ஒரு ஆணின் மீதும், தனிமையின் மீதும் மேக்னா நம்பிக்கை கொள்ளும்படி காட்சியமைப்புகள் அமைந்திருக்கும்.

அதில் மேக்னாக்கு இருக்கிற உளவியல் பாதிப்புகள் பற்றி அமருக்கு (ஷாருக் ) தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள், அந்த விடயத்தை இன்னொருவரிடம் இலேசில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு விருப்பமிருக்காது. அதனால் ஒரு ஆணின் ஏக்கம், வேண்டுகோள், கேள்விகள் எல்லாவற்றையும் பாடல்களில், தன் வரிகளினூடு கொண்டுவந்திருப்பார் வைரமுத்து. "கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
உள்ளத்தில் ரணமிருந்தால் உறவுகள் மலர்வதில்லை" என்று பாலைவன மணலில் அவள் எழுதிவிட்டுப்போகிற கவிதை வரிகள் போதும். அந்த இடத்தில் வருகிற  ரஹ்மானின் பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

                      


இந்தப் படத்தின் திரைக்கதையில் சுஜாதாவின் பங்கு உண்டு. வசனங்களில், மற்றவர்களைப் போல வாழ்க்கை அமைத்துக்கொள்ள ஏங்கும் ஒரு பெண்ணின் ஏக்கம் இருக்கும். கீழே குறிப்பிட்டிருக்கிற வசனங்கள் ஒரு உதாரணம்.

"சிரிச்சா அழகா இருக்க . அப்புறம் ஏன் உம்னு! சிரிக்க மாட்டேங்கிற!"
"பாட்டிம்மா,எட்டு வயசுல இருந்து என் சிரிப்பெல்லாம் எங்கயோ போயிடிச்சு "
"உள்ள என்ன பூட்டி வைச்சிருக்கிற"
"ஒன்னுமில்லை, துக்கம்"
"பொண்ணுக்கு துக்கம் கூடாது. என் பேரன் மாதிரி ஒருத்தனை பாத்து கட்டிக்க"
"என் தலைஎழுத்து அப்பிடி இல்லை"
"தலை எழுத்தா! எல்லாம் நாமளே எழுதிக்கிறதுதான்"


"என்னைப் பாத்தா பயமா!"
"பயமா! பயத்தைப் பத்தி உனக்கென்ன தெரியும்!"

"உலகத்துல உனக்கு எது பிடிக்கும்"
"அம்மா உள்ளங்கை, எங்க ஊர் கோயில் மாடத்துப்புறா, கவிதை"

"உலகத்துல எது பிடிக்காது"
"நீ இவ்ளோ கிட்ட வர்றது பிடிக்கல"
"பொய் சொல்ற"
"உன் சிரிப்பு, உன் அதிகப்பிரசங்கித்தனம், உனக்குள்ள இருக்கிற இந்த சந்தோஷம்" 

காமத்தையும் காதலையும் சொற்களிலும், கவிதையிலும் வெளிப்படுத்திய பக்குவம் வைரமுத்துவையும் சுஜாதாவையும் சாரும். அந்தத் திரைப்படத்தில் ஏற்படுகிற காமத்தின் இடைவெளியைப் பாடல்க் காட்சியமைப்புகளின் மூலம் அமைத்துக் காட்டியது மணிரத்தின் சிறப்பு.

Exoticism!This is a phenomenon called the "liminal space of dreaming" in that the terrorist woman cannot fulfill her sexual desire so the songs fill the void of this desire by "their sumptuousness and exotic locales" in the Ladakh region. -  Elleke Boehmer and Stephen Morton

Comments

ப்ப்பா என்ன சுகித்தல்ய்யா

அகமகிழ்வு

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்