Skip to main content

சுஜாதா கணக்கு

செயற்கையாக உருவாக்கிக்கொண்டிருக்கிற  இலக்கிய முகத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியில் ஒன்றாக சுஜாதாவை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தச் செயற்கையான முகம் சுஜாதாவுக்கு இருந்ததில்லை. அதனாலேயே சுஜாதாவை இலகுவாகத்  தொட்டுவிடமுடிகிறது. 
பிற எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தபின்னர் சுஜாதா மட்டுமே எழுத்தாளர் இல்லை என்பது தெரியவரும். அதேநேரம் அவரைச் சரியாக உள்வாங்கிக்கொண்டிருந்தால் அவரின் அசைக்கமுடியாத தனித்துவமும் வெளிப்படும். காரணம், அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் வகைப்படுத்தி ஒப்பிட்டுப்பார்க்கமுடியாது. ஒரு அடிப்படை வாசகனுக்கு அவர் தருகிற மகிழ்ச்சி வித்தியாசமானது.
சுஜாதா எழுத்தை ஒரு தொழிலாகச் செய்தவர். எழுத்தில் உணர்ச்சிபூர்வமான உள்ளடக்கங்கள் இல்லை என்று நினைத்தவர். அதனைச் அவரே  நேர்காணல்களில் சொன்னதுண்டு. 
"ஒரு புகழ் அடையணுங்கிறதைவிட ஒரு Classification (பாகுபாட்டுக்குள்) அகப்படக்கூடாது என்கிற எண்ணம். எல்லா எழுத்தாளர்களையும் இன்ன வகுப்பைச் சார்ந்தவங்கன்னு பிரிச்சுடலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை 'இந்த ஆளை வைச்சுகிட்டு என்ன பண்ணுறது' தெரியாமல் தவிக்கிறாங்க. நான் விஞ்ஞானியாக இருக்கிறதால, எழுவதே முன்ன சொன்னதுபோல எனக்கு கிராப்ட்(தொழில்நேர்த்தி) ஆகத்தான் படுது."
என்று வெளிப்படையாகச் சொன்னவரை, ஒரு கட்டுப்பாட்டுக்குள் நின்றுகொண்டு விலக்கிவைப்பது அபத்தமாகப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை தமிழில் வந்த எழுத்தாளர்களில் சுஜாதா ஒரு Polymath. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சுஜாதா ஒரு விடயத்தைப் பேசுகிறபோது அதனை எளிமையாக தொடர்புபடுத்துகிற மாதிரி எந்த எழுத்தாளர்களும் தொடர்புபடுத்துவதில்லை. அதற்கு எல்லாப் பிரிவுகளிலும் நாட்டம் வேண்டும். ஒரு விடயத்தை உணர்ச்சிபூர்வமாக மட்டுமே அணுகாமல் விட்டால்த்தான் அந்தப் பார்வை கிடைக்கும். 

"வெகுஜனப் பத்திரிகையைப் பொறுத்தவரையில் அவர்கள் என்னை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள், நான் அவங்களை உபயோகப்படுத்திக்கிறேன். Mutual exploitation."
எல்லா வாசகர்களினாலும் ஒரு சாதாரண வாசிப்பை நிகழ்த்திடமுடியும். ஒரு புத்தகத்தையோ, எழுத்தாளரையோ ஒரேமாதிரி உள்வாங்கிக்கொள்ளமுடிவதில்லை. வசனநடையில் புதுமைப்பித்தனின் சாயலைக் கொஞ்சம் கொண்டவர் சுஜாதா. ஒருகாலத்தில் புதுமைப்பித்தனையே விமர்சித்தவர்கள் உண்டு. சுஜாதாவின் வாசகர்களிடமும் அவரின் சாயல் இருப்பது இயல்பு. புதுமைப்பித்தனின் பாதிப்பு இல்லாமல் எப்படி ஒருவரால் எழுதமுடியாதோ, அதேபோலத்தான் சுஜாதாவின் பாதிப்பு இன்றி எழுதமுடியாது. சுஜாதாவே வந்து சொல்லாதவரை, அவரின் வாரிசு என்று சிலர் தங்களைத்தாங்களே மார்தட்டிக்கொள்ளகூடும். ஆனால் அவரைச் சரியாகப் பயன்படுத்தி, அவர் வழியில் தமிழ் வாசகர்களைக் கொண்டு செல்கிறார்களா என்கிற சந்தேகம் மட்டும் இருக்கிறது.
தேடலைச் சொல்லிக்கொடுக்கிற எழுத்தாளர் சுஜாதா. வாசிக்கிறவர்களின் மூளைக்கும் தேடலும் நிறைய  வேலைகள் இருக்கும். புத்தகத்தை மூடிவிட்டு அவர் சொன்ன விஷயங்களைத் தேடித் படிப்பவர்களுக்கு  மட்டுமே அவரின் எழுத்தில் நிறையக் கிடைக்கும்.  
உதாரணத்துக்கு, எனக்கு சுஜாதாவின் எழுத்தில் உள்ள Cataloguing உத்தி பிடிக்கும். அதை நான் பின்பற்றுவதுண்டு. சில முறைகள் ஆச்சரியப்படுத்தலை நிகழ்த்தக்கூடியது. சிலருக்கு புத்தகம் படித்தால் cognitive dissonance ஏற்படும்.எத்தனை எழுத்தாளர்களை வாசித்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உண்டு. ஆனால் ஆரம்பம்தான் உளவியலில் ஒரு சமநிலையை உருவாக்கித்தரவேண்டும். சுஜாதாவைச் சரியாகப் படித்தவர்களிடம் அந்தச் சமநிலை இருக்கும். 

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ