Skip to main content

நீ தானே என் பொன்வசந்தம்



உறவுகள் ,உணர்வுகள் எனும் இரண்டு விடயங்களோடு உளவியலையும் சேர்த்து விட்டால் ஏராளமான படைப்புகள் கைகளில் கிடைக்கும் . அதைத் திறம்படக்  கோர்த்து ஒரு படைப்பாக தருவதில் கைதேர்ந்தவர்கள் என இயக்குனர்  பாலுமகேந்திரா, மறைந்த ஜீவா, கௌதம் மேனன் , மணிரத்னத்தை குறிப்பிட்டு சொல்லலாம் . இந்த தனித்துவத்துக்கு காரணம்  பெண்கள்  வெறும் காட்சிப்பொருள்கள் எனும் சித்தாந்தத்தை மாற்றியது தான்.

உறவுகளும் உணர்வுகளும் மிகவும் மென்மையானவை என்பதனால் தானோ என்னவோ அவர்களின் காட்சியமைப்புகளும் மெதுவாகவே மனதை ஆட்கொண்டு மென்மையாக்கிவிடும். ஆனால்  இந்த மென்மை எனும் விடயம் தமிழ் சினிமாவுக்கும் அதன் பெரும்பாலான இரசிகர்களுக்கும்  இன்னமும் பழக்கப்படாத ஒன்று. காதலுக்கு பிரச்சனை தருவது புறக்காரணிகளே எனும் உளவியலுக்குள்ளும் மிக ஆழமாக உந்தப்பட்டு இருப்பவர்கள்.

வழமையாக பெண்களை வெறும் அசையாத பொருளாக மையத்தில் வைத்துக்கொண்டு , ஆணின் மனோநிலையில் இருந்துகொண்டே சுழலும்  காதலை உடைத்து பெண்ணின் மனநிலையையும் ஆழமாக தொட்டவர் கவுதம் எனலாம். இதையே தான் நீ தானே என் பொன் வசந்தத்திலும் செய்திருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயாவில் பெண்களின் குழப்பமான மனோவியலை ஒரு காட்சியில் அழகாய் வடித்திருப்பார் . வார்த்தைகளால் விபரிக்க முடியாத அந்த குழப்பமான உணர்வுகளை த்ரிஷா  மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் .

விலகிச் செல்லவேண்டும் போலிருக்கும் ஆனால் மீண்டும் வர மாட்டானா  என்ற ஏக்கமும்  அதில் கலந்து  இருக்கும். இது ஊடலின் அதீத நிலை. தம்மைத் தாமே,தம் காதலை  பரீட்சித்துக் கொள்ளவேண்டும் என்ற நிலையினால் ஏற்படும் மனப் பிறழ்வும் இதற்கு  ஒரு காரணம். இந்த  இருமுனையப் பிறழ்வு(Bipolar disorder )  காதலில் அதிகம்  இருக்கும் . ;)  

விண்ணைத்தாண்டி வருவாயாவில் மேலோட்டமாக தொட்டதை இதில் நிறைவாக காட்டியிருக்கிறார்.  பாடசாலைக்காதல், கல்லூரிக்காதல் , அதன் பின்னரான  காதல் என மூன்றிலும் இருக்கும் வேறுபாட்டை காட்டியிருக்கிறார். சின்ன வயதில் தனக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடன் விளையாட வரவில்லை என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது சமந்தாவின் ஏமாற்றம்.இதே மனநிலை பின்னர் வரும் பருவங்களிலும் தொடருகிறது. தனக்கு முக்கியத்துவம் தரவில்லை எனும் ஒரு வித எதிர்பார்ப்பு. இதுவே அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பப் புள்ளி. இதனால் மீண்டும் மீண்டும் பிரிவுகள் .      

காதல்  உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் முயன்ற விதத்தை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் . காருக்குள் வைத்து சமந்தா தன் காதலை சொல்ல , ஜீவா எதுவுமே சொல்லாமல் முத்தம் மட்டுமே கொடுக்கும் காட்சி ,
"என் காதல் எடை என்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது" என்ற வைரமுத்து வரிகளை நினைவுபடுத்த தவறவில்லை . :)  இது போல பல வசனங்கள்,காட்சிகள்  director's touch எனலாம்.

இருவருக்கிடையிலும் நிகழும் மனப் போராட்டங்களை, கருத்து  வேறுபாடுகளை கமெராவின் கோணம் மாறாது காட்டியது சிறப்பு. இரு உறவுகளுக்கிடையே நிகழும்  இந்த கருத்து முரண்பாடுகளில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி தப்பித்துக்கொள்ள முயல்வதை வார்த்தைகள் உறுதிப்படுத்தும். இந்த அடிப்படைக் காரணிகளால் ஏற்படும்  பிரச்சனைகளின்  கோர்வை  இறுதியில் பிரிவு எனும் வடிவில் வந்துவிடுவதுண்டு. இதனை வெளிப்படுத்திய   விதம் சிறப்பு.   

சமந்தாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது . குறிப்பாக இந்தக் காதாப்பாத்திரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் கனதியும் அதிகம் எனலாம். தன் நிலையற்ற மனதை சமந்தா வெளிப்படுத்தும் விதம், எதிர்பார்ப்பையும் வெறுப்பையும் ஏக்கத்தையும் ஒரே தடவையில்  வெளிப்படுத்துவது  என அவரின் நடிப்பாற்றல் வெளிப்படுத்தப்பட்டது.

இரவுக்காட்சிகளுக்குரிய ஒளிப்பதிவில் பிரபுவும் ,ஓம் பிரகாஷும் கலக்கியிருப்பார்கள் . ஆனாலும் இரவுக்காட்சிகளில் மனோஜ் பரமகம்சாவின் ஒளிப்பதிவை இழந்தது போலவே உணருகிறேன்.

ரஜீவனின் கலை பள்ளிப்பருவங்களையும், டியூஷன் வகுப்புகளையும் அப்படியே கண் முன்னே கொண்டுவந்தது. குறிப்பாக  இருவரும் சந்திக்கும்  Resturant அனைத்திலும்  Interior design கள் குறிப்பிட வேண்டும் .இது போன்ற  இரசனைகளில் கவுதமை  ஈடு செய்திட முடியாது . நளினி சிறீராமின் ஆடை வடிவமைப்புகள் பின்னணி காட்சிகளுக்கும் மிகவும் பொருந்தி கண்களுக்கு  காட்சிப்பேழையாக காட்சி அளித்தன.

முதல் முறை பார்த்த ஞாபகம் பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சிறப்பு. ஆனால் பாடல்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் கொஞ்சம் சறுக்கி இருக்கிறது எனலாம் . உணர்வுகளை சரியாக புதுமையான வார்த்தைகள் கொண்டு வெளிப்படுத்தும்  தாமரையின் வரிகள் இல்லாததும்  இன்னொரு குறையாக தெரிந்தது .

ஒரு விதமான இசை அனுபவத்தை இந்தத் திரைப்படம் தந்துவிட்டு போகிறது.இசையால் ஒரு தனிக் காதல் அனுபவத்தை தருகிறது.முக்கியமாக பின்னணி இசை  ஒலியமைப்பில் அவ்வளவு ஈர்ப்பு  இல்லை. இதில் தவறு ராஜாவுடையதா  , கவுதமுடையதா  என சொல்ல முடியவில்லை . இசை சில இடங்களில்  திடீரென உயர்ந்து இல்லாமல் போய் விடுவது காட்சிகளில் வெறுமையை தெளித்துவிட்டு போகிறது .

வசந்தம் பலரின்  கடந்த காலங்களை வருடிச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.காதலை கவிதைகள் , மென்மையான உணர்வுகள் என அணுகும் இளைஞர்கள்  அனைவருக்கும் இதில் வரும்  காதல் காட்சிகள், காட்சியமைப்புகள் என அனைத்தும்  ஒரு காட்சிப்பேழையாய்   மனதில் சேர்ந்து     திரைப்படத்துடன் பிணைத்து வைத்திருக்கும் .


   

Comments

காதலுக்கு பிரச்சனை தருவது புறக்காரணிகளே எனும் உளவியலுக்குள்ளும் மிக ஆழமாக உந்தப்பட்டு இருப்பவர்கள்.///

வழமையாக பெண்களை வெறும் அசையாத பொருளாக மையத்தில் வைத்துக்கொண்டு , /// அருமையான வரிகள்... இந்த விமர்சனத்தை பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாமே சுதா..

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...