ஒரு சமூகமோ, அமைப்போ அல்லது ஒரு படைப்போ திருத்தங்களுக்கு உள்ளாவது என்பது வேறு ,அழிவுக்குள்ளான ஒரு சமூகத்தை புதிதாக கட்டியெழுப்புவது என்பது வேறு .
உதாரணமாக சொல்லப்போனால் நாம் செய்த விடயங்களில் தவறு இருந்தால் அதை திருத்தப்பார்ப்போம். சில விடயங்களை திருத்த முடியாமலும் ,தவறுகளை சரிவரக் கண்டுகொள்ள முடியாமலும் போகும் போது அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் செய்ய முயல்வோம் . இது ஒருவித சௌகரியத்தை எமக்கு கொடுக்கும். புதிய அணுகுமுறைகளையும் பிரயோகப்படுத்துவது இலகு.
பொருளாதாரத்தில் இதை Creative destruction என்று சொல்வார்கள் . ஆனால் இந்த பதிவு பொருளாதாரம் பற்றியது அல்ல. மனிதர்களின் நாகரிகமும் கலாச்சாரமும் மனித சிந்தனைகளின் வளர்ச்சி பற்றியதும்.
திருத்தங்களுக்கு உட்படுத்துவதை விட ,முழுதாக அழிவடைந்த ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் போது அது முற்றிலும் புதிய வடிவமாக உருவெடுக்கக் கூடும். மீண்டும் புதிதாய் உருவாக்கப்படும் போது அதில் நல்ல விடயங்களும் இருக்கக்கூடும் அல்லது மக்களை பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு அடிமைபப்டுத்தும் விடயங்களும் தீய விடயங்களும் இருக்கக் கூடும்.
சில சமூகங்களில் இந்த அழிவுகள் தானாகவே நிகழ்ந்து விடும். அதற்குப் போர் ,இயற்கைச் சீற்றங்கள் என்று பல காரணங்கள் சொல்லலாம். அதன் பின்னர் மீண்டும் அந்த சமூகம் கட்டியெழுப்பப்படும் போது அதில் மிக முக்கிய பங்கு வகிப்போர் அந்த சமூகத்தின் புத்திஜீவுகளும் கற்றறிந்தோர் எனப்படுவோரும் ஊடகங்களுமே.
இதில் பாமரர் , சிறுவர்கள் உள்ளடங்கலாக அனைவரையும் எளிதில் அடையக்கூடியவை ஊடகங்கள். ஊடகங்கள் சமூகத்தில் முக்கிய பங்களிப்பு செய்வதால் ,ஊடகவியலாளர்களுக்கு மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது . இதை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை . ஆனால் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
ஒரு சில ஊடகங்கள் மக்கள் எளிதில் அடிமையாகி விடக்கூடிய விடயங்களையே மீண்டும் மீண்டும் ஊட்டி வளர்க்கின்றன. மக்களை அடியமையாக்கும் எந்த விடயத்தையும் மீண்டும் வளர்ப்பது ஆபத்தானது. இது அழிந்து மீண்டும் புத்துயிர் பெறும் சமூகத்தின் சிந்தனையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சமூகத்தை குறிப்பிட்ட சில விடயங்களுக்கு(உதாரணமாக சினிமா நடிகர்கள் , கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம்) அடிமைப்படுத்தி வைத்திருக்கும் போது அவர்களின் சிந்தனையும்,சுய அறிவும் எந்த நிலைக்கு செல்லுமென்பதற்கு உதாரணமாக சில நாடுகள் இருக்கின்றன .
ஒருவரின் இன்னொன்றின் மீது வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் உண்டாக்கி அதன் மூலம் ஒரு போட்டியை உண்டாக்கி தொடர்ந்து நிலைத்திருப்பதே தற்போது பலரும் கையாளும் உத்தி. முக்கியமாக சில கருத்துகளும் பயனுள்ள விடயங்களும் நிகழ்ச்சிகளும் இருக்கும் போது அதே பொழுதுபோக்கு உத்தியை மீண்டும் மீண்டும் 24 மணித்தியாலமும் கையாளும் உத்தியை எப்போது இந்த தமிழ் ஊடகங்கள் கைவிடப்போகின்றன .?
ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தாம் சமூகத்தின் முதுகெலும்பு என்பதை உணராதவரை எத்தனை புதிய சிந்தனைகளை புத்திஜீவிகள் சமூகத்தில் தோற்றுவித்தாலும் அவையனைத்தும் இல்லாது போய்விடும் . காரணம் ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் மக்களின் தரத்தினை தீர்மானிக்கும் சக்திகள்.
இதில் மக்களின் தரம் என்பது அவர்களின் பொருளாதார தரம் பற்றியதல்ல . சிந்தை ,தூரநோக்கு பார்வை , சுய அறிவு , எதையும் ஒப்பிட்டு பகுத்தறியும் தன்மை என அவர்களின் நாகரிகம் ,கலாச்சார வளர்ச்சி போன்ற மிகப்பெரிய வட்டத்தை உள்ளடக்கியது.
Comments