Skip to main content

மழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி



'மழைக்குருவி' பாடலில் இடம்பெறும், "கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது!" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான்.   
"ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?"
பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது?
ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பார்த்திருக்கிறான். இயற்கை ஒன்றையொன்று மோகமுற்று இருப்பதை இரசிக்கிறான். ஒவ்வொரு மணித்துளியையும் இரசித்தபடி அதில் ஆழ்ந்து போயிருக்கிறான்.
அங்கே சிட்டுக்குருவியொன்று - ஒரு 
சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல் - என்னை 
வாவென்று அழைத்ததுகாண்

மொத்தப் பிரபஞ்சமும் - என் 
முன்னே அசைவதுபோல் 
சித்தப் பிரமைகொண்டு - அந்தச் 
சிட்டை இரசித்திருந்தேன்

சிட்டுக்குருவி அழகினை இரசித்திருக்கிறான். அது மனிதரிலும் எவ்வளவு உயர்வான பறவை என்று வியந்திருக்கிறான். சிட்டுக்குருவி அது தனிப்பாத்திரம் ஏற்று நடிக்கும் நாடகத்தைப் பார்த்திருக்கிறான். அப்பொழுது மேகத்தில் இருள் கவ்வுகிறது. பெருமழையொன்று வருகிறது. குருவி பறந்துவிடவே, அவனும் வீடு வந்து சேர்கிறான். சிட்டுக்குருவி என்ன துயரப்படுமோ! எங்கு ஒதுங்குமோ என்று எண்ணுகிறான். மழைவிழுந்து அதன் இறகு வலிக்குமோ என எண்ணுகிறான்.

பெய்யோ பெய்யென்று - மழை 
பெய்தால் என்ன செய்யும் 
அய்யோ பாவமென்று - குருவி 
அழுவதை நினைத்திருந்தேன்

ஆனால், கானகத்தில் நடக்கும் உண்மைக் கதை வேறு என்று அறிகிறான். அது மழையில் ஆடியிருக்கிறது. அதன் உண்மைக் கவலைதான் என்ன?
சொட்டும் மழைசிந்தும் - அந்தச் 
சுகத்தில் நனையாமல் 
எட்டிப் போனவனை - அது 
எண்ணி அழுததுகாண்

என்று அந்தக் கவிதையை முடித்திருப்பார் வைரமுத்து. ஆனால் படத்தின் பாடலுக்காக மிகச் சுருக்கமாகவும் சிறுசிறு மாற்றங்களுடனும் கொடுத்திருக்கிறார்கள்.
அந்தக் குருவி யாரை எண்ணி அழுதது? இவன் பிரிந்ததை எண்ணித்தான் அழுதது. இரசிக்கும் இவன்மீதும் காதல் வந்திருக்கிறது குயிலுக்கு! பாரதியின் குயில்போல்!
பாரதிக்கும் ஒரு குயில்மீது மாமோகம். அது இவனுக்கு ரசனையைச் சொல்லிக்கொடுக்கும். அதன் ரசிப்பில் இவன் சொக்கிப்போவான். அது கொண்டிருக்கும் காதல் வெறியை எண்ணி ஆச்சரியமடைவான். மறுபுறம், அந்தக் குயிலுக்கும் மிகுகாதல் வேண்டும்.
'காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில் சாதலை வேண்டிக் தகிக்கின்றேன்'' என்று கேட்கும்.
ஆனால் குயிலானது, குரங்கோடும் மாடோடும் இசைத்திருப்பதாய் எண்ணி கோபம் கொள்வான் பாரதி.
"நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம்மையே, 
ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் 
எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை"

இப்படிச் சொன்னதும் குயிலுக்குப் பொலபொலவென்று கண்ணீர் வந்துவிடும். பிறகு, குயில் தன் பூர்வ ஜென்ம கதையைச் சொல்லும். குரங்கனும் மாடனும், முன்ஜென்மத்தில் தன்னை மன்னனோடு சேரவிடவில்லை என்றும், அந்த மன்னன் நீர்தான் என்றும், உம்மோடு சேரவேண்டும் என்றும் சொல்லும். இது பொய்யில்லை. இதை எனக்குத் தவத்தினில் சிறந்த முனிவன் கூறினான் என்று சொல்லும். குரங்கனும் மாடனும் இந்த ஜென்மத்திலும் வந்திருப்பதாய்ச் சொல்லி கவலைகொள்ளும்.
இரசனைகள் சரிவரச் சேர்ந்துகொண்ட மகிழ்ச்சியில், பாரதி குயிலை அள்ளிக் கொஞ்ச அது அழகான பெண் வடிவம் எடுத்து வரும்.




"சாமீ! இவளழகை 
எற்றே தமிழில் இசைத்திடுவேன்?"


"கற்றவர்க்குச் சொல்வேன்; கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத்துஎனும் இவற்றின் சாரமெலாம்
ஏற்று, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமன் என்பேன்!"

என்று பாடி அவன் மோகத்தில் அவளோடு கூடியிருக்க, சோலை அழிந்து, பழம்பாயும், ஓலைச்சுவடியும், எழுதுகோலும், பத்திரிகைக்கூட்டமும் சுற்றி இருப்பதைக் கண்டு மனம் கலங்கிடுவான். அது கனவென்று அறிவான். ஆனால், இந்தக் கதையில் ஆழ்ந்த பொருள் இருக்குது என்பான்.
அதேபோல, இந்தப் பாடலின் கற்பனையும், இரு காதலர் பார்வையையும், உறவையும், பிரிவையும் அழகாகச் சொல்கிறது. மனக்கலக்கத்தை அழகாய் உரைக்கிறது. கேட்பதற்கே மனம் ஆறுதல் தரும் மொழியும் இசையுமாக இன்பம் தருகிறது.
"நீ கனவில் நான் கேட்கும் பாட்டோ? இது உறவோ இல்லை பரிவோ!" என்று இவனுக்கும் ஐயம். குயிலும் பாரதியும் சேர்ந்ததுபோல், இந்தச் சிட்டுக்குருவியும் இவனும் சேர்ந்துகொண்டால் கொண்டாட்டமன்றோ! காதலுக்கு கொண்டாட்டமன்றோ!


Comments

Anonymous said…
I am genuinely thankful to the owner of this web site who has
shared this wonderful piece of writing at here.

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...