Skip to main content

காத்திருத்தலின் அழகியலும் காதலும் : கவிதாஞ்சலி 06

அகநானூற்றிலே 58வது பாடல் காத்திருத்தலின் அழகியலையும் காமத்தையும் நயமாகச் சொல்லுகிறது. சங்கப் பாடல்களிலே இரவில் காதலனும் காதலியும்  களவில் சந்திப்பது வழக்கம் அல்லவா. அதேபோல இங்கே தலைவனுக்காகத் தலைவி காத்திருக்கிறாள். வாட்டும் குளிரில் தனிமையில் காத்திருக்கிறாள். எல்லோரும் உறங்கும் இரவில் தலைவன் வருகிறான். அவன் வந்ததும் மின்னும் வளையணிந்த தன் கைகளால் அவன் முதுகினைச் சுற்றி வளைத்துப் பற்றிக்கொண்டு இறுக்குகிறாள். ஒரு மெல்லிய அணைப்பு. தமிழிலே 'ஞெமுங்க' என்றொரு அழகான சொல் இருக்கிறது. இறுக்குதல் அல்லது அழுத்துதல் என்று பொருள். ஆனால், இது காதல்கொண்டோரின் நெருக்கம். மிகவும் மென்மையான இறுக்கம். இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே ஒருவித மென்மை வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லவா!
"வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப் பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற"
மலர்களில் பேரின்பம் வேர்பிடிக்க தென்றல்போலொரு தீண்டல்தானே வேண்டும். தன் மார்புகளை அவன் மார்போடு மெல்ல அழுத்தி அணைக்கிறாள். அணைப்பின்போது தன் துயரமெல்லாம் கரையவேண்டும் என எண்ணுபவள் பெண். அதேநேரம், அணைக்க எரிகிற தீயல்லவா காதல்! வனையப்பட்டது போல இருக்கிற இளைய நகில்கள்(மார்பு) அழுந்தும்படி அவனைப் பலமுறை தழுவுகிறாள். இருவரும் விட்டுப் பிரிய எத்தனிக்கும் போதெல்லாம் இழுத்துத் தழுவிக்கொள்கிறாள். அவனைத் திரும்பத் திரும்ப தழுவி மகிழ்கிறாள். 'பல்லூழ்' என்றால் பலமுறை. சிநேகிதனே பாடலில் "இதே அழுத்தம். இதே அணைப்பு. வாழ்வின் எல்லை வரை வேண்டும்" என்று வைரமுத்து எழுதியிருப்பார். ஒவ்வொருமுறை நீ என்னைத் தழுவும்போதும் என்மீதான காதல் புதிதாய் அதே இறுக்கத்தோடு இருக்கவேண்டும். உன் அணைப்பு நெகிழ்ந்தால் நான் துயருறுவேன் என்பதுதான் அதன் பொருள். ஆனா இங்கே அணைக்கும்போது பிரிவினை எண்ணியே இறுக்கி அணைத்துக்கொள்கிறார்கள். அதனால் கொஞ்சம் இறுக்கமும் இருக்கும். ஒவ்வொருமுறை தழுவும்போதும் இறுக்கம் அதிகரிக்கும். அப்படித் தழுவி மகிழும்போது ஒரு விடயம் சொல்லுகிறாள்.
"உங்களைத் தழுவி மகிழ்வதிலும் பார்க்க இன்பம் எது தெரியுமா? உங்களுக்காகக் காத்திருக்கிறதுதான். நீங்க வருவீங்கங்கிற நம்பிக்கையோடு பார்த்து உயிர் பூத்திருப்பேன். காத்திருப்பு எனக்குக் கவலையா இருந்தாலும் அந்த எதிர்பார்ப்பு அழகா இருக்கும். நீங்க வந்ததும் உங்களோடான பொழுதை எப்படிக் கழிக்கப்போகிறேன்ன்னு எண்ணியே மகிழ்வேன். ஆனா உங்களைக் கட்டிக்கும்போது என்ன பிரச்சனைன்னா நீங்க எப்போ பிரிந்துபோவீங்கனு யோசிக்க ஆரம்பிப்பேன். அப்பிடி யோசிச்சா கவலையா இருக்கும்." என்று சொல்கிறாள். "காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா" என்பதற்கு இதைவிட உளவியல் ஆழம்  சொல்ல முடியாது. 
முதல்வன் படத்திலே இடம்பெற்ற "குறுக்குச் சிறுத்தவளே" என்கிற பாடல் ஆரம்பிக்க முன்னர் நிகழ்கிற காட்சிகள் அழகு. சங்கரின் பழைய பாடல் காட்சியமைப்புகளில் இந்த அழகியல் இருக்கும். ஏற்கனவே "கப்பலேறிப் போயாச்சு" என்கிற பாடலைப் பற்றி எழுதியிருக்கிறேன். சங்ககாலத் தலைவனும் தலைவியும்போல முதல்வனும் தேன்மொழியும் ரகசியமாகச் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்போது தேன்மொழி பேசுகிறாள். "எல்லோரும் நெல் கொடுத்து உன்னை சாமி உசரத்துக்குக் கொண்டுபோயிட்டாங்க. அதையும் மீறி உனக்குக் கொடுக்க என்கிட்டே என்ன இருக்கு"னு அவள் தன்னையே அளிக்க முன்வருகிறாள். இருவரும் அணைத்து மகிழும்போது அந்தப் பாடல் ஆரம்பமாகும். "ஒருதடவை இழுத்து அணைச்சபடி உயிர் மூச்சை நிறுத்து கண்மணியே... உம் முதுகைத் துளைச்சு வெளியேற இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே"  என்கிற இந்த வரிகள் அந்தச் சந்திப்பினையும் காதலையும் நயமாகச் சொல்லும் வரிகள். 
திரைப்படத்தின் கதையையும் காட்சியமைப்பின் அழகையும் உள்வாங்கிப் பாடல்கள் எழுதுபவர் வைரமுத்து என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Comments

Anonymous said…
காத்திருத்தல் ❤

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...