பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகும் இயற்கை அனர்த்தம்

இலங்கையில் தமிழரின் அரசியல் நிலை தொடர்பான பதிவுகளை நீண்ட நாட்களாக எழுதவில்லை. இருந்தாலும், நூறு நாட்கள் கழித்துப் பார்த்தாலும் புரிந்துவிடும் சீரியல் போலத்தான் நகர்கிறது. கால நீட்டிப்புத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பொருளாதாரத்தில் 'ரோட்டின் கிட் தியரம்' என்று ஒன்று இருக்கிறது. அதாவது, ஒரு குடும்பத்தில் நல்ல வசதியான, கொடை உள்ளம் கொண்ட பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பரிசுப்பொருட்களும் பணமும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். அதில் ஒரு குழந்தை தீய செயல்களில் ஈடுபடுகிறது. தனது சகோதரர்களை அடித்துத் துன்புறுத்தும் செயலைத் தொடர்ந்து செய்துவருகிறது. இதைப் பார்த்துப் பெற்றோர்கள் தமது பணத்தையும் பரிசுப்பொருட்களையும் தீய செயல்களில் ஈடுபடும் குழந்தைக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் மேல் அதிக அளவில் அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். இதைப் பார்க்கிற குழப்படிகாரக் குழந்தை தன்னுடைய சகோதரனைக் காயம் செய்வதையும் சேட்டைகள் புரிவதையும் நிறுத்திவிடும். காரணம், இந்தச் செயற்பாடு தனக்குக் கிடைக்கவிருக்கிற பரிசுகளையும் பணத்தையும் நிறுத்திவிடும் என்பதால் இந்த எண்ணம் அதன் ஆழ்மனதில் பதிந்துவிடும். அதேபோன்றதொரு எண்ணத்தில்தான் இலங்கை அரசும் நடந்துகொள்கிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.
தமிழர்களிடமிருந்து பறித்த அதே காணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்தல், ஆணைக்குழுக்களின் போலியான மனிதஉரிமை மீறல் விசாரணைகள் , தமிழ்ப் போலிஸ் அதிகாரியை நியமித்தல் போன்ற செய்திகளுக்குத் தமிழர்கள் தற்காலிக மகிழ்ச்சி அடைகிறார்கள். இதை ஒரு மாற்றமாகக் காண்பித்து வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது இலங்கை அரசு. இப்போது ஜிஎஸ்பி வரிச்சலுகையையும் எதிர்பார்த்து நிற்கிறது. வருகிற உதவிகளில் பெரும்பாலானவற்றை பாதிக்கப்பட்டவர்களான நாம் போராடிக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டியதன் அவசியத்தினை உணராமல் இருக்கிறோம். அப்படிப் பெற்றுக்கொள்வதற்கு இதைப் பற்றிய புரிதலற்ற தலைமைகளைக் கொண்டிருக்கிறோம். 
ரோட்டின் கிட் தியரத்தின் அடிப்படையில் இந்தக் குழப்படிகாரக் குழந்தை நல்லவர் வேடம் போட்டுக்கொண்டிருகிறது. போதுமான உதவிகள் கிடைத்துத் தலைநிமிரும்போது தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிக்கும். வரவிருக்கும் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு நமக்கு எது தேவை என்கிற உறுதிப்பாட்டோடு நகர்வது அவசியம். உறுதியானதொரு தீர்வு வேண்டுமென்று அரசிடம் கேட்கவேண்டும். அதேநேரம் அதிக அளவிலான பொருளாதாரச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளைப் பார்க்கவேண்டும்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னொரு மிகப்பெரிய பிரச்சனையாக இயற்கை அனர்த்தங்கள் இருந்துவருகிறது. இயற்கை அனர்த்தங்களைத் தடுக்க முடியாது. ஆனால் சில இயற்கை அனர்த்தங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் இந்த வெள்ளப்பெருக்கும் ஒன்று. இந்த வெள்ளப்பெருக்கைச் சில உலகநாடுகள் மிகவும் கவனமாகக் கையாள்கின்றன. நெதர்லாந்து தனது நாட்டின் வெள்ளப்பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தினை ஒரு பதிவாக எழுதியிருந்தேன்.

நெதர்லாந்து என்றால் டியூலிப் மலர்களும், அழகான வீடுகளும் வீதிகளும் நினைவில் வரலாம். ஆனால் அங்குள்ள மக்களுக்கு நீரோடு நீண்டகாலப் பிரச்சனை இருக்கிறது. நெதர்லாந்தின் பெரும்பாலான நில அமைப்பு கடல் மட்டத்திலும் தாழ்ந்தது. அங்கே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உண்டு. ஆனால் அந்நாடு தனது கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டது. உடனே அந்த அரசு பல திட்டங்களை முன்மொழிந்து செயற்படுத்தத் தொடங்கியது. அதில் ஒன்றுதான் "Room for river" திட்டம். பல திட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தில் "Overdiepse Polder" கட்டமைப்புத் திட்டமும் குறிப்பிடத்தக்கது. 
நீரோடு போராடாமல், நீரை உள்ளே வரவிட்டு நீரோடு வாழ்வோம் என்பதே அவர்களின் பிரதான நோக்கம். ஆறுகளை அகலமாக்கி, அவற்றை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களை வெளியேற்றி, தமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வுக்காக தொலைநோக்குத் திட்டங்களை வகுக்கிறார்கள். ஆனால், நாங்களோ குளங்களை இல்லாமல் செய்து, நீரோடும் வழிகளில் எல்லாம் சீமெந்து கொண்டு கட்டடங்கள் அமைத்துவருகிறோம்.

யாழ்ப்பாணம் வேகமாக வளர்ந்துவரும் நகரம் என்று இலங்கைக்கும் மாலைதீவுக்குமான உலகவங்கி இயக்குனர் சொல்கிறார். யாழ்ப்பாண நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கி 55 மில்லியன் டொலர்களைக்  கடனாக வழங்கியிருக்கிறது. இதில் வீதிகள் அபிவிருத்தி, நீர் வடிகால் அமைப்பைச்  சீர்செய்வது, குளங்களைப் பாதுகாப்பது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.  உண்மையில் இந்த வெள்ளப்பெருக்குப் பிரச்சனையானது  தமிழர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலச் சவால். தமிழ்நாட்டிலும் இது மிக முக்கியமானதொரு பிரச்சனை. தமிழ்நாடு அரசானது இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆற்றங் கரையோரங்களில் மரம் நடுவதற்காக இந்திய ரூபாய்களில் 52 கோடியை ஒதுக்கியிருக்கிறது. ஆற்றங்கரையில் மரம் நடுவது வெள்ள அபாயத்தை 20 சதவீதத்தால் குறைப்பதாகச் சொல்வார்கள். ஆற்றைத் தூர்வாருவதற்கும் குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கியிருக்கிறது. உண்மையில் நீர் வடிகாலமைப்பு சீர்செய்யப்படவேண்டியதும் அவசியம். சென்னையானது  பத்து வருடங்களுக்கு ஒருமுறை மிகப்பாரிய மழை வீழ்ச்சியை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கொழும்பில்  50 வருடங்களுக்கு ஒருமுறை மிகப்பாரிய வெள்ளப்பெருக்கு அனர்த்தம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மெகாபொலிஸ்(megapolis) திட்டத்தில் நீர்வடிகாலமைப்புகளை சீர்செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கென 40 பில்லியன்களை இலங்கை அரசு ஒதுக்கவிருக்கிறது. இயற்கை அனர்த்தங்கள் பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இந்தத் திட்டங்களும்  அவசியமாகிறது. இந்தக் கடன் உதவி உண்மையிலேயே அந்த மக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படப்போகிறதா என்பதைத் தமிழ்த் தலைமைகள் கவனிக்குமா எனத் தெரியவில்லை. குறிப்பாகப் பயிர்ச்செய்கைக்கு இந்த வெள்ளப்பெருக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. பயிர்ச்செய்கை நிலங்களில் வெள்ளம் நிற்காமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவது நல்லது. 

Comments

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்