Skip to main content

கவிப்பேரரசு வைரமுத்து

இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடைய பிறந்ததினம். இதுவரை  வைரமுத்துவின் வரிகளின் தனித்தன்மை பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். சொற்கள் மீதான எனது காதலை வைத்துக்கொண்டு எத்தனையோ இன்னல்களைக் கடந்து வந்திருக்கிறேன். அதற்கு வைரமுத்துவினுடைய சொற்களும் மிகுந்த உறுதுணையாக இருந்திருக்கிறது. சொற்களுக்குள் இசையும் இருக்கிறது. அதைக் கேட்பதற்குச் சிந்திக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். சொற்களுக்குத் தப்பிக்கவைக்கத் தெரியாது. உணர்வுகளை நெகிழவைக்கத் தெரியும். தவம்போல் இருந்து யோசித்து, சொற்களைத் தவணை முறையில் நேசிக்கும் அன்புள்ளங்கள் எவராலும் இந்தப் பெயரை விரும்பாமல் இருக்கமுடியாது.

கவிதை என்பது மொழியின் முதிர்ச்சி. சொற்களின் ஒழுங்கமைப்பு. அதேபோல, காதல் என்பது மனித நாகரிகத்தின் உச்சம். இந்த நம்பிக்கையை நிஜ உலகம் தகர்க்கும்போதெல்லாம் கவிதைகள்தான் அவற்றைத் தாங்கிப்பிடித்திருக்கின்றன. இவை இரண்டையும் உயர்ந்த மென்சொற்களால் அனுகியவை நமது சங்ககால இலக்கியங்கள். இலக்கியக் காதலில் காமம் உண்டு. தற்போதைய எழுத்துகளில் பிரதிபலிக்கப்படும் அநாகரிகமான காமம் போலல்லாது தொழுகைக்குரிய காமமாக இருந்தது. சரணடைதல் இருந்தது. காமத்தையும் காதலையும் இயற்கையோடு பேசியதால் மென்தன்மை மாறிவிடவில்லை. காதலையும் காமத்தையும் பிரித்துப்பார்க்கவில்லை. உண்மைத்தன்மை இழைந்திருந்தது. "மெய்யில் தீரா மேவரு காமம்" என்று சொன்னார்கள். இந்த இலக்கிய நயத்தைக் கவனமாக உள்வாங்கிக்கொண்டு காதலுக்கு மரியாதை செய்யும்படி பாடல்கள் தரும் கலை அறிந்தவர் வைரமுத்து. அதனால்தான் "ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டுவழி உசிர் கசிய" என்றும் "பஞ்சுக் கால்களை நெஞ்சில் சூடவா" என்றும் எழுதமுடிந்தது.

வைரமுத்து எழுதிய பாடல்களில் காதல், காமம், வேட்கை, சரணடைதல், தொழுகை , உருக்கம், அழுகை, இயற்கை எல்லாவற்றையும் சொல்லும் பாடல்கள் ஏராளம் இருக்கிறது. அந்த வரிகளை எடுத்துக்காட்டப் போனால் நீண்டுகொண்டே போகும். "கடலிலே மழை வீழ்ந்தபின் எந்தத் துளி மழைத்துளி" என்பதுபோல வைரமுத்துவின் பாடல்களில் எடுத்துக்காட்டாக ஒன்றை எடுப்பதென்பது கடினமான காரியம். இருந்தாலும், "லவ் பேர்ட்ஸ்" படத்தில் இடம்பெற்ற "மலர்களே மலர்களே" பாடலைச் சொல்லலாம். காதலன் உயிரோடு இல்லை என்று கலங்கியவள் அவனை உயிரோடு காண்கிறாள். இது நிஜமா என்று இயற்கையிடம் கேட்கிறாள். இயற்கை எங்கும் அவன் நினைவே என்று உருகுகிறாள். காதல் நோய் வாட்டுகிறது. "மேகம் திறந்துகொண்டு மண்ணில் இறங்கிவந்து மார்பில் ஒளிந்துகொள்ள வா" என்று அழைக்கிறாள். காமத்தில் எவ்வளவு நயம்! இருவரும் உரையாடிக்கொள்கிறார்கள். "மலர் சூடும் வயதில் என்னை மறந்துபோவது தான் முறையா" என்று கேட்கிறாள். அதென்ன மலர் சூடும் வயது! பழைய தமிழ்க் கலாச்சாரத்தில் தாலி எல்லாம் கிடையாது. பெண்கள் திருமணமானவர்கள் என்பதைக் காட்டுவதற்காக சிலம்பைக் கழற்றி வைத்துவிடுவார்கள். பூக்கள் சூடிக்கொள்வார்கள். நான் மலர் சூடவேண்டும். திருமணம் செய்துகொள்ளாமல் என்னை மறந்துபோனது முறையா என்று கேட்கிறாள் . பெண்களின் சார்பாக வைரமுத்து எழுதிய பாடல்கள் ஏராளம். வெறுமனே வர்ணனையாக இல்லாமல் பெண்ணின் உணர்வுகளின் ஆழத்தைச் சொல்லுகிற வரிகள்.

தற்போதைய பாடல்களிலும் எழுத்திலும் காதலையும் காமத்தையும் கொச்சைப்படுத்தியே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் இலக்கிய வாசிப்பு இன்மையே என்று வைரமுத்து தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சொல்லியிருந்தார்.

இலக்கியப் பாடல்களில் தொடர்ச்சிநிலை இருக்கும். சூழலை விளக்குவதற்கு இருக்கிற நிலையிலிருந்து ஒரு காட்சி விரிந்து செல்லும்.  அவற்றைத் தன் பாடல்களில் வைரமுத்து அதிகம் பயன்படுத்துவது உண்டு. "செண்பகப் பூவின் மடல்களைத் திறந்து தென்றல் தேடுவதென்ன?" என்று காதலன் இயற்கையைக் காட்டிக் கேட்க, " தென்றல் செய்த வேலையைச் சொல்லி என்னைப் பார்ப்பதென்ன" என்று  காதலி பதில் சொல்வதாக வரிகள் அமைந்திருக்கும். சில வரிகள் காட்சிப்படுத்திப் பார்க்கும்படி இருக்கும். 


ஒக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை
தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்
உயிர்க் காற்றை மாற்றிக்கொண்டோம்
ரசனை எனும் ஒருபுள்ளியில்
இரு இதயம் இணையக் கண்டோம்
நானும் அவளும் இணைகையில்
நிலா அன்று பால்மழை பொழிந்தது.

*********************************************************
கும்பக்கரை அருவியில் நீயும்
குழைஞ்சு குழைஞ்சு ஆடி முடிச்சு
சொட்ட சொட்ட கரைவரும்போது
சொட்டும் துளியில் ஒருதுளி கேட்டேன்

***********************************************************
எந்தன் காதல் சொல்ல 
என் இதயம் கையில் வைத்தேன் 
நீ தாண்டிப்போன போது 
அது தரையில் விழுந்ததடி 
மண்ணிலே செம்மண்ணிலே 
என் இதயம் துள்ளுதடி 
ஒவ்வொரு துடிப்பிலும் 
உன் பேர் சொல்லுதடி 
கனகப்பூவே வருக 
உன் கையால் இதயம் தொடுக்க 
எந்தன் இதயம் கொண்டு 
நீ உந்தன் இதயம் தருக..

******************************************************************

எங்கே எங்கே 
விண்மீன் எங்கே 
பகல் வானிலே 
நான் தேடினேன் 
அங்கே இங்கே 
காணோம் என்று 
அடிவானிலே நான் ஏறினேன் 

***************************************************************************************
வனங்களில் பூந்தளிர்
தேடும்போதும்
நதிகளில்
நீர்குடைந்தாடும் போதும்
உந்தன் திசை தேடும் விழிகள் 

*************************************************************
காற்றில் ஓர் வார்தை
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்
கண்களை தொலைத்து விட்டு
கைகலால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை
இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்
கண் விழிப்பேன்

*****************************************************************************************************************

ஒரு சிறுகிளி பார்த்தேன் 
வானத்திலே 
மனம் சிக்கிக்கொண்டதே சிறகினிலே 
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே 
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே 
நான் வானம் 
என்ற ஒன்றில் இன்று 
காட்டில் வாழ்ந்து காதல் யோகி ஆனேனே 

*******************************************************************************************************************
அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே
வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை
கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்!
தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்!
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள் (இந்தப்  பாடல் நா. முத்துக்குமாரா என்கிற சந்தேகம்  இருக்கிறது)

**************************************************************************************************************
வானையும் வணங்கி 
மண்ணையும் வணங்கி 
உன்னை நான் தழுவிக்கொள்வேன் 
ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து 
உனையும் அணைத்து உயிர் தரிப்பேன் 
என் உயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும் 
உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன் 
*****************************************************************************************************

பஞ்சவர்ணக் கிளி நீ பறந்த பின்னாலும் 
ஐஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு 
பறந்து வந்து விருந்து குடு 
மனசுக்குள்ள சடுகுடு 
மயக்கத்துக்கு மருந்து ஒன்னு குடுகுடு 

*********************************************************************************************************

நீ என்னைக் கடந்து போகையில உன் நிழலை பிடிச்சுகிட்டேன் 
நிழலுக்குள்ள குடியிருக்கேன் 
உடம்ப விட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க 
கிழிஞ்ச நெஞ்சை எதைக் கொண்டு நானும் தைக்க 

*********************************************************************************************************
கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி,
அன்பே, என் மனசுக்குள் கட்டியதென்ன ?
சலங்கைகள் அணிந்தும்,
சத்தங்களை மறைத்தாய் – பெண்ணே
உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன ?

******************************************************************

உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள் 
மொட்டுக்கள் முட்ட கண்டு துடித்தாள் 
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள் 
இனி மேலும் திரை போட வழியில்லை
உன் காதல் பிழையில்லை


வைரமுத்துவின் வரிகள் வெறுமனே காட்சியைக் கண்முன்னே தருவது மட்டுமல்லாது உணர்வுகளையும் ஆழமாகச் சொல்லிச்செல்வது உண்டு. தற்போதைய பாடல்களில் இந்தத் தொடர்ச்சியான கவிதை அமைப்பைக் காண்பது அரிது. தொடர்ச்சியில்லாது அவை ஆழ்ந்த பொருளை உணர்த்துவது இல்லை.

Comments

Aruna Jayaraman said…
Beautiful! Came across your blog at 5:00 am and this has been the best wakeup I've had in a long time! Thanks a ton. Please keep writing. Vairamuthu is my favourite Tamil poet and love is my favourite expression of a human being. Your choice if Vairamuthu's words to highlight are some if my all time favorites too. Beautiful recollection this morning! Thanks again.

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...