அமெரிக்காவானது தனது புதிய இராஜதந்திரக் கொள்கைகள் மற்றும் அபிவிருத்திக்கான திட்டங்களையும் உள்ளடக்கிய இரண்டாவது அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. இது 'QDDR' என அழைக்கப்படுகிறது. இதனை அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளுக்குப் பொறுப்பான திணைக்களம் வெளியிடுகிறது. அமெரிக்க அரசினதும் சர்வதேச அபிவிருத்திக்கான ஏஜென்சியினதும்(USAID) நீண்டகால மற்றும் குறுகிய இலக்குகளைக் கொண்ட வெளியுறவுக்கொள்கைகளை நன்றாக ஆராய்ந்து, நன்கு நெறிப்படுத்தக்கூடிய திட்டங்களை வடிவமைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. கொள்கைகளையும் திட்டங்களையும் ஒவ்வொரு வருடமும் மீளாய்வு செய்வதை விடுத்து, நான்கு வருடங்களுக்கு உண்டான நீண்டகாலத் திட்டங்களை இது முன்வைக்கிறது.
ஒபாமாவின் தலைமையின் கீழ், அப்போதைய(2009-2013) அமெரிக்கச் செயலாளராக இருந்த ஹிலாரி கிளிண்டனால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த முறைமை. முதலாவது அறிக்கையானது ஹிலாரி கிளிண்டன் தலைமையில் 2010 இல் வெளியிடப்பட்டது. அதில் 'மக்கள் சக்தி மூலம் முன்னோக்கிச் செல்லுதல்' என்கிற சாராம்சம் முன்னிலைப்படுத்தப்பட்டது. Smart Power என்றால் "Speak softly and carry a big stick." என்கிறார் ரூஸ்வெல்ட். இந்த 'ஸ்மார்ட் பவர்' என்கிற உத்தியைத்தான் ஹிலாரி முன்வைத்தார். அதன்பின்னர் 'அரேபிய வசந்தம்' எனப் பெயர்கொண்ட மக்கள் எழுச்சியை ஊக்குவித்து முன்னின்று நடாத்தியது ஹிலாரி கிளிண்டன் தலைமை என்று அரேபிய நாட்டுத்தலைவர்கள் சிலர் விமர்சித்ததைக் கவனித்தில் கொள்ளவேண்டும்.
தற்போதையை செயலாளராக இருக்கும் ஜோன் கெரியின் தலைமையில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையானது இன்னமும் முன்னேற்றகரமானது என்று கருதுகிறார்கள். இந்தமுறை அமெரிக்க அபிவிருத்திக்கான முகவர் நிலையமும் அமெரிக்க அரசும் இணைந்து செயற்படுகிற மாதிரியான வேலைத்திட்டங்கள் அதிகம். மாறிவரும் உலகுக்கு ஏற்றபடி ஒத்துப்போகும் தன்மையைக் கடைப்பிடிப்பதே இலக்கு.அபிவிருத்தியும் வெளியுறவுக்கொள்கையும் இரண்டு முக்கியமான கூறுகள் என்று கூறுகிறது.
அமெரிக்க அரசும் அமெரிக்க அபிவிருத்திக்கான முகவர் நிலையமும் இணைந்து செயற்படக்கூடிய நான்கு முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்துகிறது இந்த அறிக்கை. தீவிரவாத வன்முறைக்கு எதிரான போராட்டம், வெளிப்படையான சமூக அமைப்பினைக் கட்டி எழுப்புதல், வளங்களைப் பகிர்வதை முன்னெடுத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தடுத்தல் போன்றவற்றைப் பட்டியலிடுவதோடு, இவையனைத்தும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை என்றும் உலகெங்கும் சிறந்த ஆட்சியமைப்பை நிறுவுவதற்கு அவசியமானது என்றும் கூறுகிறது.
நாடுகளின் பிரச்னையைச் சர்வதேச இரீதியாக தீர்த்து வைப்பதில் அக்கறை இருக்கிற அதேநேரம் உள்நாட்டுப் பிரச்சனைகளை அவர்களாகவே தீர்த்துக்கொள்ள முன்வந்தால் முன்னின்று உதவி செய்வதிலும் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகிறது, அந்தந்த நாடுகளின் ஜனநாயக அமைப்பினைப் பலப்படுத்தல், வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல், ஊழலுக்கெதிராகப் போராடுதல் போன்றவற்றில் பங்களிப்பினைச் செலுத்துவதாகவும் சொல்கிறது.
அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகள் முன்னர் கடினத்தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. உதாரணமாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவானது அதிக கடினமான தன்மையை கடைப்பிடித்தது என்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம்(CSIS) விமர்சித்திருந்தது. அதன்பின்னர் CSIS தனது ஆய்வில் 'ஸ்மார்ட் பவர் கமிஷன்' என்று அறிக்கை வெளியிட்டது. அமெரிக்காவின் எதிர்காலத் திட்டமிடல்கள் அதன் அடிப்படையில் நிகழவேண்டும் என்றது. ஐக்கிய நாடுகள் சபையைத் தனது 'ஸ்மார்ட் பவர்' கருவியாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகு அதுவே ஒபாமாவின் வெளியுறவுக்கொள்கையாகவும் இருந்தது. அதன்பின்னர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட முதலாவது QDDR இல் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிரபலமானது. அதன் அடிப்படையில் தனது இழப்புகளைக் குறைத்துக்கொண்டு தேவையான காரியங்களை நீண்டகாலத்திட்ட அடிப்படையில் புத்திசாலித்தனமாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. ஆனால் இப்போதைய கொள்கைகள் 'Smart power' அடிப்படையில் இல்லை 'Brain Power' என்கிறார் ஜோன் கெரி.
Comments