“There is music in words, and it can be heard you know, by thinking.”
- E.L. Doctorow
மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான் கூட்டணியில் 'ஓ காதல் கண்மணி' பாடல்கள் நவீன வடிவம் பெற்றிருக்கிறது. ஜதிகள், மிகவும் குறைவான வரிகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் சொற்கள், இடையிசை, ஆரம்ப இசை அளவீடுகள் என ரஹ்மானின் முயற்சிகள் அனைத்தும் பாடல் முழுதும் புதிதாக வெளிப்படுகிறது. ஆனால் கவிதை மொழிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமலே இருப்பாதாகத் தோன்றுகிறது. வெளிப்படுபவை எல்லாமே மொழிகளாகும்போது, இசைபோல சொற்களுக்கும் எப்போதும் இணையான இடம் கிடைக்கவேண்டியது அவசியம்.
இந்தக் கூட்டணியின் முன்னைய படைப்புகளில் கவிதை உயரும் இடங்களில் இசை நெகிழ்ந்துகொடுத்தும், இசை உயரும் இடங்களில் மொழி மௌனித்தும் இயங்கியிருக்கிறது. தன்னுடைய மொழிக்கு சரியான இடம்தேடிக் காத்திருந்தபோது வந்தவர் ரஹ்மான் என வைரமுத்து கூறியிருந்தார். இந்தக் கூட்டணியின் முன்னைய படைப்புகள் எல்லாம் இன்றுவரை சலிக்காத்திருப்பதன் ரகசியமும் அதுதான். மெதுவாய் நுழைந்து பரவுகிற தந்திரத்தை தமிழ் ஓசைகள் அறிந்திருக்கின்றன. அவை இசைவந்த பாதையின்வழி இன்றுவரை நுழைந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் சித்ராவின் குரலில் மொழியின் வளைவெல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
"எப்போதுமே கவிதை வடிவில் பாடல்களை எழுதுங்கள்" என்று பொதுவெளியிலேயே வைரமுத்துவிடம் வேண்டுகோள் வைப்பவர் மணிரத்னம். கவிதை மொழியில் பாடல் அமைவதன் அழகியல் புரிந்தவர். வைரமுத்துவின் 'ஆறாம் பூதம்' என்கிற கவிதையைப் படித்துவிட்டு, அதை ரஹ்மானிடம் கொடுத்து இசையமைக்கச் சொன்னபோது பிறந்ததுதான் 'யாக்கைத்திரி' பாடல் என்று படித்திருக்கிறேன். சொற்களால் கட்டமைக்கப்பட்ட கவிதை பாடலானது அழகு.
ஆரம்பத்திலிருந்து சொற்களை இசைக்காகப் பயன்படுத்திப்பார்ப்பது ரஹ்மானின் முயற்சிகளில் ஒன்றாக இருந்தது. "தீண்டாய் மெய் தீண்டாய்" பாடலின் இடையிசை, யாக்கைத்திரி, தீ தித்திதிக்கும் தீ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். "யாக்கைத் திரி காதல் சுடர்" என்கிற உயர்ந்த கவிதை வரிகளுக்கு இடையில் 'Fanaa' என்கிற உருது மொழிச்சொல் ஒலிக்கும். "அழித்துக்கொள்ளுதல்" என்கிற பொருள்கொண்ட அந்தச்சொல் கவிதையின் ஒவ்வொரு இடங்களிலும் ஒலிக்கும். உடைந்த வார்த்தைகள் ஏற்படுத்தும் ஓசைகள் கேட்பதற்கு நன்றாயிருந்தாலும் வைரமுத்து பேசுகிற கவிதைமொழிகள்தான் பாடலின் உயிரோட்டமாக இருந்தது. நவீன இசையென்று சொற்களை இசைக்காக வளைக்கிறபோதெல்லாம் அவை சிதையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஓ காதல் கண்மணியில் இடம்பெற்ற "பறந்து செல்ல வா" என்கிற பாடல் பற்றிச் சில விஷயங்களை வைரமுத்து அவர்களே குமுதத்தில் பகிர்ந்திருந்தார். முதல்முறையாக எல்லை தாண்டுகிற காதலில் உடல் தொட்டும்தொடாமலும் நகர்வதுபோல வார்த்தைகளையும் பட்டும்படாமல் மென்மையாக அமைக்கவேண்டும் என மணிரத்னமும் தானும் மொழிக்கொள்கையை நிர்ணயித்துக்கொண்டதாகக் கூறியிருந்தார்.
இந்த நிர்ணயித்துக்கொண்ட மொழிக்கொள்கை, நவீனத்துவம் என்றொரு விடயத்தைக் காட்டவேண்டும் என்பதையெல்லாம் உடைக்கவென எழுதப்பட்ட பாடல்தான் மலர்கள் கேட்டேன். கடவுளைப் பார்த்து பக்தன் கேட்பது போல இருக்கிற அதேநேரம் காதலன் ,காதலிக்கும் பொருந்திவருகிறபடி ஒரு தமிழ்க் கீர்த்தனை எழுதித்தாருங்கள் என மணிரத்னம் கேட்டதால் பிறந்ததுதான் இந்தப் பாடல் என்கிறார் வைரமுத்து. நல்ல மொழிஅமைப்பினைக்கொண்ட சில வரிகள் இந்தப் பாடலில் இடம்பெறவில்லை. சிலவேளைகளில் திரைப்படத்தின் இடையில் பயன்படுத்தப்படலாம்.
சொற்கள் கேட்டேன் கவிதை தந்தனைபசியில் துடித்தேன் இரையாய் வந்தனை
மின்மினி கேட்டேன் விண்மீன் தந்தனை
எதனைநான் கேட்பின் உனையே தருவாய்
பிணியில் துடித்தேன் மருந்தாய் வந்தனைஎதில் நான் துடித்தால் இறையாய் வருவாய்?
நானே வருகிறேன் பாடலில் "சின்னஞ்சிறு" என்கிற சொல் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. ஆரம்பத்தில் அந்தப்பாடலுக்கு வரிகள் மிகவும் சிக்கலான அமைப்பினைக் கொண்டதாக இருந்ததாகவும், அதனை எளிமைப்படுத்தி மீண்டும் மீண்டும் வருகிறபடி வரிகள் அமைக்கபட்டதாகச் சொல்கிறார் ரஹ்மான். Thumris இசை வகையை உதாரணம் காட்டுகிறார்.
பறந்து செல்ல வா என்கிற பாடலில் இடம்பெற்ற யோசிக்காதே போ.. யாசிக்காதே போ.. என்கிற வரிகள் கொஞ்சம் நீண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வைரமுத்துவின் 'பெயர் சொல்லமாட்டேன்' கவிதையிலிருந்து சில வரிகளும், 'பூக்களும் காயம் செய்யும்' கவிதையிலிருந்து சில வரிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 'பெயர் சொல்லமாட்டேன்' என்கிற கவிதைதான் அமர்க்களம் படத்தில் 'மேகங்கள் என்னைத்தொட்டுப் போவதுண்டு' பாடலாக உருவாகியது. அதில் பயன்படுத்தப்பட்ட அதே வரிகளை மீண்டும் இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நவீன இசையென்று கவிதைமொழி சிதைக்கப்படுகிறதா என்கிற சந்தேகம் இன்னமும் இருக்கிறது. இந்தப் பாடல்களின் நீண்டகால வெற்றியைப் பொறுத்தே முடிவுக்கு வரமுடியும்.
Comments