வளர்ந்துவருகிற தொழில்நுட்பம் காரணமாகப் புத்தகங்கள் தமது இருப்பினைத் தொலைத்துவிடும் என்பதே பலரதும் எண்ணம். தொழில்நுட்ப வளர்ச்சியில் சில விடயங்கள் பிரதியீடாகவும் சில விடயங்கள் மெருகேறிக்கொண்டும் வருகின்றன. புத்தகங்களை இரண்டாவது வகையில்தான் இணைத்துக்கொள்ளவேண்டும். அதாவது, மாற்றமடைந்து வருகிற விடயங்களின் பட்டியலில் சேர்த்துக்கலாம்.
புத்தகங்களின் எதிர்காலம் பற்றிய விடயத்தில், அமெரிக்காவினைச் சேர்ந்த Brian Dettmer என்பவரின் கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியது. புகைப்படத் தொழில்நுட்பமும் அச்சுத் தொழில்நுட்பமும் முன்னேறியபோது ஓவியங்கள் அழிந்துவிடும் என்பதே பலருடைய கருத்தாக இருந்தது. ஆனால் ஓவியங்களோ தம்மை அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டன. கிட்டத்தட்ட அதனை ஒரு விடுதலை என்றே சொல்லவேண்டும். தனக்கென ஒரு சுயமான கௌரவத்தோடு ஓவியங்கள் வேறு வடிவங்களையும் நிலைகளையும் தொட்டன. அதே நிலையில்தான் புத்தகங்களும் இருக்கின்றன என்பதே அவருடைய கருத்து.
' Business Model Generation' என்கிற புத்தகத்தை ஒரு நவீன புத்தக வடிவமைப்பு என்று சொல்லலாம் . அதன் வடிவமைப்புக்கே அதனைப் பல தடவைகள் வாசிக்கலாம். சொல்ல வருகிற விடயத்தை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். போட்டி நிறைந்த வியாபார உலகில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விளையும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். இருக்கிற வியாபாரத்தை ஒரு குறிப்பிட்ட காலத் திட்டத்துக்குள் முன்னகர்த்திக் கொண்டுசெல்ல எண்ணுபவராகவோ, பழைய முறைகளுக்கு புதிய வடிவம் கொடுப்பவராகவோ இருந்தால் இந்தப் புத்தகத்தை நிச்சயமாகப் படிக்கவேண்டும்.
இந்தப் புத்தகம் எந்த விடயத்தைச் சொல்லவருகிறதோ அதையே தன்னுள் நிகழ்த்திக்கொண்டு வந்திருக்கிறது.
Comments