ஒரு ஆணினுடைய பார்வையில், சொட்டுச் சொட்டாய் உயிர்பெறும் பெண்மையின் துல்லியமான உணர்வுகளைப் படிப்பதென்பது தமிழ்ச் சூழலில் எப்போதேனும் ஒருமுறை நிகழ்கிற விஷயம். ஒரு பெண்ணினுடைய விரகதாபத்தை வெளிப்படுத்தும் புதுமைப்பித்தனின் 'வாடாமல்லிகை', 'கல்யாணி' மாதிரியான கதைகள், வைரமுத்துவின் கவிதைகள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணினுடைய வாழ்வினை முழுவதுமாகப் பதிவுசெய்கிற தமிழ் நாவல்களைக் காண்பது அரிது.
சுஜாதா தன்னுடைய "எப்போதும் பெண்" என்கிற நாவலில் ஒரு பெண்ணினுடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய விடயங்களைப் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒரு பெண்ணானவள் எப்படி வளரவேண்டும் என்பதை ஒரு சமூகம் எப்படி முன்கூட்டியே நிர்ணயித்து வைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார். அந்தத் தீர்மானத்தின் வழியிலேயே இந்தப் புத்தகத்தில் வருகிற பெண்ணும் பிறந்து வளருகிறாள்.
பிரான்ஸ்ஸினைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான Simone de Beauvoir என்பவரின் "The Second Sex" என்கிற பிரபலமான புத்தகத்தை உதவியாகக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியதாக சுஜாதா கூறுகிறார். The second sex புத்தகத்தில் உள்ளதைப் போலவே இந்தப் புத்தகத்தையும் பிரதானமாக முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒரு பெண் என்பவளை எந்த விடயம் தீர்மானிக்கிறது என்கிற உயிரியல் தகவல்களுடன் இந்தப் புத்தகம் ஆரம்பமாகிறது. அதன் பின்னர் இரண்டாவதாக, ஒரு பெண் எதிர்கொள்ளும் பருவமாற்றங்களையும் அந்தரங்கமான விஷயங்களையும் பதிவுசெய்கிறது. இறுதியாக, ஒரு பெண்ணை இந்தச் சமூகம் அவளுக்கென நிர்ணயித்து வைத்துள்ள இடத்திற்கே மீண்டும் மீண்டும் கொண்டுவருகிறது என்பதைப் பதிவு செய்கிற நாவல்.
பெண்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது என்கிற உண்மையை மதிக்கவேண்டிய கட்டாயத்தன்மையை உணருவதற்காகவேனும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். குறிப்பாகப் பழமைவாதச் சிந்தனை உள்ள பெண்களும் இந்தப் புத்தகத்தைக் கட்டாயமாக வாசிக்கவேண்டும்.
Comments