தமிழ்ச் சூழலில் இருந்து புதிதாகப் புத்தகங்கள் வாசிக்க வருபவர்களுக்கு எந்தப் புத்தகத்திலிருந்து வாசிப்பினை ஆரம்பிப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கிறது. யாராவது புத்தகம் வாசிப்பவர்களைக் கண்டால் அவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி இதுதான் என்று நினைக்கிறேன். ஒருசிலரின் 'பிஸி' எனக் காட்டிக்கொள்ள விளையும் செயற்கைத் தன்மையால், அவர்களாகவே வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் 'உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?' என்கிற முதலாவது கேள்வியை இப்போதைக்கு ஒத்திப்போடுவோம்.
புத்தகங்களைப் படிக்க விரும்புபவர்கள் சுஜாதாவிடம் இருந்து வாசிப்பினை ஆரம்பிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதுவரை நான் படித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பம். தீவிரமான இலக்கிய வாசகன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு புத்தகத்தை இரண்டு, மூன்று தடவைகள் வாசித்தால் தான் தலைக்கு ஏறும். ஒருபோதும் எண்ணிக்கையினை நோக்கி ஓடி வாசிப்பின் நோக்கத்தைச் சரித்திட முயல்வதில்லை. வார்த்தைகளில் நின்று செல்லும் நிதானமான வாசிப்பு மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளனை முழுமையாக உள்வாங்கி மரியாதைப்படுத்த வேண்டும் என எண்ணுவதுண்டு. நீங்கள் புதுமைப்பித்தனை அணுகும்போது, வசனங்களிலும் சங்கீதம், கவிதை உண்டென்பதை அறிந்துகொள்வீர்கள்.
தகவல் அறியும் ஆர்வத்தில் நிகழந்தது தான் என் முதலாவது வாசிப்பு. பத்திரிகைத் துணுக்குகளில் ஆரம்பமானது சுஜாதாவிடம் வந்து நின்றது. அதன் பின்னர் என்னை இன்றுவரை அழைத்து வந்தது 'serendipity' தான். இந்தச் சொல்லினை அறிமுகப்படுத்தியதும் சுஜாதா தான். அதுவும் இந்தச் சொல் என்ன என்பதைத் தேடித் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். 'ஒன்றினைத் தேடுவதை நாம் நோக்கமாகக் கொண்டிராதபோது தற்செயலாக நம் புலனுக்கு அகப்படுவது; அதன் விளைவால் ஏற்படும் அதிர்ச்சி மகிழ்ச்சி' என அதனை வரையறுக்கலாம். பிரிட்டனைச் சேர்ந்த மொழிபெயர்ப்பு நிறுவனம் ஒன்று இந்தச் சொல்லை , 'மொழி பெயர்ப்பதற்கு கடினமான சொற்கள்' என்கிற பட்டியலில் சேர்த்திருக்கிறது.
என்னைப்பொறுத்தவரை சுஜாதா ஒரு 'polymath' என்பேன். அவருடைய 'கற்றதும் பெற்றதும்', 'ஏன்? எதற்கு? எப்படி?', 'கற்பனைக்கு அப்பால்' போன்றவை தான் என்னுடைய முதலாவது புத்தக வாசிப்பு. 'என் இனிய இயந்திரா' என்னுடைய முதலும் முழுமையானதுமான நாவல் வாசிப்பு. சுஜாதாவை வாசிக்கும்போது அவருடைய அந்த 'சீரியஸ்' இல்லாத பன்முக ஆளுமை உங்களைக் கவரும். மற்றைய எழுத்தாளர்களை விடுத்து, முதலாவதாக இவரைத் தேர்ந்தெடுக்கக் சொல்வதற்குக் காரணமும் அதுதான். உங்கள் சிந்தனையிலும் எண்ணத்திலும் ஒருவித சமநிலையைத்(balanced state of mind) தோற்றுவிக்கும் எழுத்து. அந்த 'Mind state balancing' என்கிற வித்தையைச் சொல்லாமல் சொல்லித் தருவார். இப்போதைய காலத்தில் பலருக்கும் அவசியமான விஷயம் என நினைக்கிறேன். அதன் பின்னர் நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாசிக்கலாம். அவரே உங்களுக்கு பலவிதமான தளங்களில் வாசிப்பை அறிமுகம் செய்வார். 'அவள் மெல்லிய ஆடையுடன் சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு லோலீட்டாவைப் படித்துக்கொண்டிருந்தாள்' என்று சட்டென்று அறிமுகப்படுத்துவார். குறித்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. கற்றதும் பெற்றதும் நூலில் மட்டுமே சுஜாதா குறிப்பிட்ட புத்தகங்களை ஒரு பட்டியலாக (எவ்வளவு புத்தகங்கள்!)ஒருவர் தொகுத்திருக்கிறார்.
இப்போதெல்லாம் பல்வேறு தளங்களிலும் வாசிப்பினை நிகழ்த்துவது என்பது அனைவருக்கும் அவசியம். தேவையில்லாதவை என்று ஒன்றுமில்லை. நீங்கள் படிக்கிற, வாசிக்கிற விடயங்களை உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் பிரயோகப்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். அந்தப் பிரயோகம் வாசிப்பினால் தான் நிகழ்கிறது என்பதை உணரும்போது மட்டுமே வாசிப்பினைப் புரிந்துகொள்ள முடியும். மற்றபடி அழுத்தம் கொடுத்ததெல்லாம் வாசிப்பினை நிகழ்த்த முடியாது. மகிழ்ச்சி தருவிக்கும், அறியாமை விலகும் சுகத்தினால் அதனை நிகழ்த்த முடியும்.
Comments