லா.சா.ராமாமிருதம் அவர்கள், எழுத்தின் ஒலிப்பு முறையில், வசனங்களில் இருக்கும் கவிநயத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்களில் உள்ள சோகமும் கவிநயம் மிக்கவை. லா.சா.ராவின் கரைபுரண்டோடும் எழுத்தை நான் முதன்முதலாகக் கண்டுகொண்டது 'அபிதா' என்கிற நாவலில் தான். அவருடைய மற்றைய படைப்புகளையும் படிக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் நிகழ்ந்தது தான் 'ஜனனி' என்கிற சிறுகதைத் தொகுப்பின் மீதான வாசிப்பு. இதில் 'மீனோட்டம்' என்கிற சிறுகதைத் தொகுப்பில் உள்ள லா.சா.ராவின் அடையாளங்கள் ஏராளம்.
"நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக்கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுகள், வாக்கியங்கள், வார்த்தைகள், பதங்கள் பத-ஸரி-க-ஸா-ம-த ஸ்வரங்கள் ஓசைகள், ஒலிகள், மோனங்கள். திக்கித் திகில்கள். திமிதிமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நஷத்ர இருட்டில் கருங் குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளை சிலிர்த்துக்கொண்டு தங்கத்துடைப்பம் போன்ற வால்களைச் சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு திடும் - குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறேன். கண் கவிழ்கிறேன். விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது. மூச்சு மெதுவாய் முனை திரும்புகிறது. உள் மூட்டம் படிப்படியாய்க் களைந்து வக்களிப்பு தோன்றுகிறது. அருவி கருணையாய் சொரிந்து கொண்டிருக்கிறது. " - லா.சா.ராமாமிருதம் (மீனோட்டம்)
"மொட்டுப்போல் வாய் சற்றே திறந்த வண்ணம், அரைத்துணி போன இடம் தெரியாமல் கையையும் காலையும் விசிறிப் போட்ட வண்ணம் அவள் தூங்குவதைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது. குழந்தைகள் பாடு நிம்மதி. பேசிக் கொண்டேயிருக்கின்றன! அப்படியே தூக்கத்துள் நழுவி விடுகின்றன. விழிப்பதும் அப்படித்தான்." - (தூசி-மீனோட்டம் )
"வேணும் போது பூணி, வேணாத சமயத்தில் கழட்டி எறியக்கூடிய தனிமைதான் பாந்தமாயிருக்கிறது." ( தேவி- மீனோட்டம் )
"பொட்டலங்களைப் பிரிச்சு, சாமான்களை எடுத்து வைப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் இருக்கு." ~ லா.சா.ராமாமிர்தம்
Comments