தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய வைரமுத்துவுடனான நேர்காணல் நிகழ்ச்சியில், தனது அடுத்த படைப்பைப் பற்றி அவர் கூறிய செய்தி கொஞ்சம் மகிழ்வைத் தந்தது. அடுத்த படைப்பு எப்போது வெளியாகும்!
"என்னுடைய அடுத்த படைப்பு 'ஈழத்தமிழ்' என்று முடிவு செய்திருக்கிறேன். ஈழம் தான் என்னுடைய அடுத்த படைப்புக்கான களம். அதுதான் என் நெஞ்சிலும் மூளையிலும் கனத்துக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய மனிதப்படுகொலை ஈழம்தான். அவர்களின் நியாயம் இன்னும் தீரவில்லை. அந்தப் போராட்டம் தோற்றிருக்கலாம், காரணங்கள் இன்னும் தோற்கவில்லை. அந்தப் போராட்டம் முடிந்திருக்கலாம் அல்லது முடிக்கப்பட்டிருக்கலாம். அதற்கான கண்ணீர் இன்னும் காயவில்லை. அந்தக் கண்ணீரை, ரத்தத்தை, உள்ளிருக்கும் நியாயத்தை போர் முடிந்த பின்னும் தொடரும் அவலத்தை அந்த மனிதகுலத்துக்கான மீட்சியை என் படைப்புக்குள் கருவாக அமைத்து படைக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப் பணி சாதாரணமானதல்ல. ஏதோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டால் கவிதை வந்துவிழுந்துவிடும். ஒரு வெண்ணிலா இரவில் மாலை 7 மணிக்கு தொடங்கினால் அதிகாலை 5 மணிக்குள் என் படைப்பு முடிந்துவிடும் என்றெல்லாம் நான் சொல்லிவிடமாட்டேன். இதற்கு குயில் சத்தங்கள் வேண்டாம். தோட்டாக்களின் சத்தங்கள் என் காதுகளில் கேட்டிருக்கவேண்டும். இதற்கு கண்ணீரையும் இரத்தத்தையும் நான் உணர்ந்திக்க வேண்டும். அந்த முள்ளிவாயக்காலில் சென்று நான் நடந்து பழகவேண்டும். அந்த ஈரக்காற்று, திறந்த வானம், மக்களின் அவலம் அங்கு நிகழ்ந்த சோகங்களில் தடம் தடையம் எல்லாம் சேகரித்து ஏற்கனவே உள்ளிருக்கும் வலியை, நான் ரணத்தை ஆற்றிக்கொள்ளகூடிய காரணங்களை அறிந்துகொண்டுதான் அந்தப் படைப்பை நான் படைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். அதற்கான பணியை தொடங்கிவிட்டேன்."
- வைரமுத்து(தந்தி டிவி பேட்டியில்)
Comments