Skip to main content

மணிரத்னத்தின் ஆண்கள்



இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற  கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே  அவர்களைச் சுற்றி இயங்கும்  ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும்  மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு  ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள்.  வீரத்துக்கு "மன திடம்" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு. 


எழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'யில் தனியே போய்ப்  பெண் கேட்கும் அரவிந்தசாமி, ரேவதியை எதிர்கொள்ளும் மௌனராகம் மோகன், அழுத்தங்களை எதிர்கொள்ளும் அஞ்சலி ரகுவரன், தளபதி ரஜினி, யாருக்கும் விலைபோகாத குரு மாதவன், ஓக்கே கண்மணியில் வருகிற பிரகாஷ்ராஜ், தளபதி ஜெய்ஷங்கர்  என்று நீட்சியானதொரு பட்டியல் சொல்லலாம்.

வைரமுத்து எழுதியதுபோல ,

கர்வம் வந்தால் கல்லாய் உறைவான் 
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்

நேர்படப் பேசி, நினைப்பவற்றைச் சாதித்து, தன் படைப்புகள் மீதும், செயல்கள் மீதும் கர்வம் கொண்ட ஆண்கள். முரட்டுத்தனத்துக்கும் கர்வத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. கர்வம் என்பது விலைமிகுந்த பொருள். சிறுமைப்படுத்தல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுவது. காதல் அதனினும் உயர்வு. இந்த இரண்டையும் அவரின் நாயகர்களும் நாயகிகளும் எதிர்கொள்ளும் விதம் தனியானது. அடுத்த பதிவில் கர்வம் மோதிக்கொள்ளும் காதலை எழுதலாம் என்றிருக்கிறேன். அதற்கான அறிமுகம் இந்தப் பதிவு.

Comments

Anonymous said…
You are a very clever individual!
Anonymous said…
Your views are different and unique.Really I admire ur Tamil love .

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...