கடந்த ஞாயிற்றுக்கிழமை, வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டியக்கமானது, உலகில் பெருமளவில் பணம் படைத்த பலருடைய இரகசிய தகவல்களையும் "பனாமா பேப்பர்ஸ்" என்று பெயரிட்டு வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணக்கசிவானது, உலகில் அதிக பணம் படைத்தவர்கள் அனைவரும் தங்களது பில்லியன் கணக்கிலான பணங்களை வரி கட்டாமல் எப்படி மறைத்து வைத்திருக்கிறார்கள் என மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. குறிப்பாக, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என அதிக பணம் கொண்ட அனைவரையும் இந்தத் தகவல் கசிவு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதுவரை வெளியான தகவல்களின் படி பீபா தலைவர் கியானி இன்பான்டினோ, மெஸ்ஸி, ஜாக்கி சான் போன்ற பிரபலங்களோடு சேர்த்து 143 அரசியல் பிரபலங்களில் 12 தலைவர்களும் உள்ளடங்குகிறார்கள். குறிப்பாக புட்டின், டேவிட் கமேரூன், நவாஸ் ஷரிப் உட்பட பல தலைவர்கள் தங்களது உறவினர்கள் பெயர்களில் நிறுவனங்கள் ஆரம்பித்து பெருமளவிலான பணங்களை முதலிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரத்தால் ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகியிருக்கிறார்.
வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் நாடான பனாமா, "வரிகளற்ற சொர்க்கபுரி" என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் 15 வீதமான நாடுகள் வரிகளற்ற சொர்க்கபுரிகள்(Tax haven) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, மிகவும் குறைவான வரிகள் அல்லது வரிகளே இல்லாத நாடுகள் என்றும் சொல்லலாம். மேலதிகமாகப் பணம் படைத்தவர்கள், குறிப்பிட்ட நாடுகளில் ஒரு வங்கிக் கணக்கையோ அல்லது நிறுவனத்தையோ ஆரம்பித்து அதில் தங்களது மேலதிக பணத்தைப் போட்டு வைக்கலாம். அந்த நாட்டின் சட்டங்களுக்கமைய அவர்களுடைய இரகசியமானது உச்ச அளவில் பாதுகாக்கப்படும்.
உதாரணமாக, சுவிஸில் பணத்தைப் போட்டு வைக்கவேண்டுமானால் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்தால் போதும். பனாமாவில் பணத்தைப் போட்டு வைக்கவேண்டுமானால் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கவேண்டும். சுமார் ஆயிரம் டொலர்களில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துவிடலாம். அந்த நிறுவனமானது வெறுமனே ஆவணங்களில் மட்டும் இருந்தால் போதுமானது. அந்த நிறுவனத்துக்குப் பணியாளர்கள், சொத்துகள் எல்லாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதனை "ஷெல் கம்பனிகள்" என்று சொல்லுவார்கள். அதனை ஆரம்பிப்பவர்கள் தங்களுடைய பெயரைப் பயன்படுத்தாமல், நம்பிக்கைக்குரிய வேறு ஒருவரை இயக்குனராக நியமிக்கலாம். அந்நிறுவனத்தின் ஆவணச் செயற்பாடுகள் அனைத்திற்கும் அவரின் பெயரே பயன்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலுத்திவிட்டால், இந்த ஷெல் கம்பனிகளை உருவாக்கி அவற்றைப் பராமரிக்கும் வேலைகளை சில சட்ட நிறுவனங்கள் செய்துகொடுக்கும். மேலதிகமாகப் பணம் கொடுத்தால் இயக்குனர்களைக் கூட நியமித்துத் தருவார்கள். நீங்கள் இயக்குனரைத் தேடி அலையத் தேவையில்லை. இந்த நிறுவனத்தின் மூலம் நீங்கள் உங்கள் சர்வதேச வியாபாரப் பணக் கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தலாம். லண்டனில் அப்பார்ட்மென்ட்கள் வாங்கலாம். இந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் பற்றிய விபரம் இறுதிவரை வெளியில் தெரியவராது என்பதே இதனை உருவாக்கிக் கொடுக்கும் சட்ட நிறுவனங்கள் தரும் உத்தரவாதம். இந்தப் பணியை உலகின் நான்காவது மிகப்பெரிய சட்ட நிறுவனமான "மொசக் பொன்செகா" நிறுவனமும் செய்துவருகிறது. பனாமாவில் மட்டுமல்லாது வரிகளற்ற சொர்க்கபுரிகளான (Tax havens) வெர்ஜின் தீவுகள், கரீபியன் , பஹாமாஸில் கூட ஷெல் கம்பனிகளை உருவாக்கித் தருவார்கள். தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் இரகசியங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்டு உச்ச அளவில் பாதுகாக்கப்படும் என்று சொன்ன இந்த நிறுவனத்திலிருந்தே மிகப்பெரிய அளவிலான ஆவணங்கள் கசிந்திருக்கிறது.
குறிப்பிட்ட "மொசக் பொன்செகா" எனும் சட்ட நிறுவனத்திலிருந்து கிட்டத்தட்ட 11.5 மில்லியன் அளவிலான கோப்புக்கள் கசிந்திருக்கிறது. வரலாற்றிலேயே மிகப் பாரிய அளவிலான ஆவணக்கசிவு இடம்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 1971ம் ஆண்டு "பென்டகன் பேப்பர்ஸ்" என்று பெயரிடப்பட்டு, வியட்நாம் போர் பற்றிய இரகசிய ஆவணங்கள் வெளியானது. டானியல் எல்ஸ்பெர்க் என்பவர் 7000 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களைப் பிரதி எடுத்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்பிவைத்திருந்தார். 2010ல் விக்கிலீக்ஸ் தரவுகள் வெளியாகும்வரைக்கும் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆவணக்கசிவாக இது கருதப்பட்டது. 2010ல் வெளியான விக்கிலீக்ஸ் தரவுகளின் அளவு 1.7 கிகாபைட்கள் ஆகும். "பனாமா பேப்பர்ஸ்" என்று அழைக்கப்படும் கோப்புக்களினுடைய அளவு 2.6 டெராபைட்கள் ஆகும். முறையே 2013,2014,2015 ஆண்டுகளில் வெளியான ஒப்ஷோர் லீக்ஸ்(offshore leaks), லக்ஸம்பெர்க் லீக்ஸ், ஸ்விஸ் லீக்ஸினைவிட இது பன்மடங்கு பெரியது. இவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்தால்கூட "பனாமா பேப்பர்ஸ்" தரவுகளின் அளவு மிகப்பெரியது.
இந்த ஆவணங்களானது முதலில் சுடட்சே ஜெய்துங்(Süddeutsche Zeitung) என்கிற ஜேர்மனிய பத்திரிகைக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இந்தத் தகவலைத் தங்களுக்கு அனுப்பி வைத்தவர்கள் எந்தவிதமான உதவிகளையோ, பணத்தையோ எதிர்பார்க்காமல் தங்களுடைய பாதுகாப்பை மட்டும் உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று அந்தப் பத்திரிகையின் நிருபரான பாஸ்டியன் ஒப்ன்மேயர் கூறுகிறார்.
இந்தப் பத்திரிக்கையானது புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கத்துடன் இந்தச் செய்தியினைப் பகிர்ந்துகொண்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக 80 நாடுகளைச் சேர்ந்த 100 ஊடக நிறுவனங்களின் 400 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்ததாக இந்தக் கூட்டியக்கம் தெரிவிக்கிறது. 1970 இலிருந்து 2016ம் ஆண்டு வரையிலான தரவுகள் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
Comments