மீனாட்சி - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"முத்தம் கொடுத்தாரா! கன்னத்துலையா கையிலையா"
"எங்க ரெண்டுபேருக்கு இடைல ஒன்னும் இல்லை"
"அந்தளவுக்கு டைட்டா கட்டிப்பிடிச்சாரா"
"மீனு,இது உன்னோட கவிதையும் இல்லை; காதலும் இல்லை"
"பின்ன என்ன"
"ஒரு மாதிரி நேசம்னு சொல்லலாம்"
"நேசமா ! டெட்டோல் போட்ட வார்த்தை எல்லாம் வேணாம். லவ் பண்றேன்னு பளிச்சுன்னு சொல்லு" 

Jane Austin எழுதிய "Sense & Sensibility" என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்". இருந்தாலும், அந்தந்தக் கதாப்பாத்திரங்களின் தன்மையைத்  தீர்மானிப்பதில்  சுஜாதாவின் வசனங்களின் பங்கு அதிகம். அவர் வசனத்தில் உருவான  திரைப்படங்களில் வரும் வசனங்களையும், அந்த வசனங்களின் தன்மையால் அந்தந்தக் கதாப்பாத்திரங்களுக்குக் கிடைக்கப்பெறும் பிம்பத்தையும்  கவனித்துக்கொண்டே இருக்கலாம். அந்தத் தன்மைக்காகவே இந்தத் திரைப்படத்தையும் பல தடவைகள் பார்த்துவிட்டேன். 

ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த 'மீனாட்சி' என்கிற கதாப்பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் சுஜாதாவின் பெண்ணை ரசித்துக்கொண்டேயிருக்கலாம். சுஜாதாவின் நாவல்களை வாசித்தவர்களுக்கு சுஜாதாவின் பெண்ணை நன்றாகத் தெரியும். தன்னைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் மீனாட்சி. தீர்க்கமாக முடிவெடுக்கும் பெண்களுக்கென்றே இருக்கும் ஒருவித அழகு. அந்த நிச்சயத்தன்மையாலேயே உருவானவள்.  கொஞ்சம் கவிதை, இலக்கியம் என்று கண்களில் நிறையக் கனவுகளைச் சுமப்பவள். சமூகத்தின் சாஸ்திர விதிகளையும் எண்ண ஓட்டத்தினையும் ஒதுக்கிவிட்டு நகரும் பெண்.

மீனாட்சியின் அக்காவான சௌமியா அவளுக்கு நேர்மாறானவள். "நீ இப்படியே இருந்தால் உன்னை எல்லாரும் அழவைச்சிட்டுதான் போவாங்க" என்று அக்காவுக்கு தைரியம் சொல்கிற கதாப்பாத்திரம் மீனாட்சியுடையது. அப்படிப்பட்ட மீனாட்சியின்  முடிவே  பிழையாகிறது. ஒருவன் நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியபோதும் அதே தைரியத்தோடு மீண்டு வருகிறாள். இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருந்தாலும், ஒரு காட்சியும் வசனமும் அவளுடைய கதாப்பாத்திரத்தின் அழகினை எடுத்துச்சொல்லக்கூடியது. பின்னால், அப்பாஸ் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள விளையும் காட்சி அவசியமற்றது என்று விமர்சனம் உண்டு. ஆனாலும் மீனாட்சியினை மீண்டும் உயர்த்தி வைக்கும் காட்சி அது.

அப்பாஸ் அவளை ஏமாற்றி இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தபிறகு, தன்னை நியாயப்படுத்திக்கொள்ள வருகிறான். ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் பிழைகளைவிடத் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள விளையும்போது அதனை எதிர்கொள்வது சவாலானது. மிகவும் சௌகரியமாக பெற்றோர்கள் மீதோ, சூழ்நிலை மேலோ அல்லது அடுத்தவர்கள் மீதோ காரணங்களைச் சொல்லித் தங்களை  நியாயப்படுத்த விளைவார்கள். அவளோ நிச்சயத்தன்மை உடைய பெண். அவளை அப்படி ஏமாற்றுவது ஒன்றும் சுலபமல்ல. காருக்குள் அழைத்துவைத்துப் பேசுகிறான் . தன் வியாபாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளத் 'தியாகம்' செய்ததாகச் சொல்கிறான். அதற்கு அவள் சொல்லும் திடமான மறுமொழி அவளை மீண்டும் உயர்த்திவிடுகிறது. "நீ செய்தது தியாகம். ஆனா உன்னோட சேர்த்து என் எதிர்காலத்தையும் வித்த பாரு... அது பெருந் தப்பு. உனக்கு அதுக்கு எந்த உரிமையும் இல்லை" என்றுவிட்டு புறப்படுவாள்.

சஹானா ராகம், போர், இலக்கியம், காதல் என்று சுஜாதாவின் வசனங்களில் இருக்கும் அந்த versatility அழகு. அந்தந்த வசனங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம் . ஆனால் இந்தப் பதிவு  மீனாட்சிக்குரியது. சுஜாதாவுக்குப் பிறகு, இந்த மாதிரி வசனங்களை ரசிக்ககூடிய அளவு எழுதுபவர்கள் யாருமில்லை. 

Comments

Anonymous said…
அழகான ரசனை

Popular posts from this blog

கண்ணாளனே...!

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

மணிரத்னத்தின் ஆண்கள்